thoughts-ideas

இந்து தமிழ் திசை கட்டுரை 1 - இந்திய விவசாயத்தின் எதிர்காலம் என்ன?

ரவிசங்கர் கருப்பையா
August 17, 2026

மீளுருவாக்க விவசாயம் - ஒரு அறிமுகம்

இந்து தமிழ் திசை கட்டுரை 1 - இந்திய விவசாயத்தின் எதிர்காலம் என்ன?

விவசாயம் இன்று ஒரு குறுக்குச் சாலையில் நிற்கிறது. ஒருபுறம், பாரம்பரிய முறைகளின் மீதான நம்பிக்கை; மறுபுறம், ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் சார்ந்த நவீன வேளாண்மை. ஆனால் இந்த இரண்டுக்கும் இடையே, நம்முடைய மண் ஒரு ஆபத்தான நிலையை நோக்கி நகர்கிறது.

மண்ணின் நிலை:

உலகம் முழுவதும், மண்ணின் ஆரோக்கியம் என்பது கேள்விக்குரியதாக ஆகியுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையும், யுனெஸ்கோவும், “தற்போதைய வேளாண்மை மற்றும் தொழில்துறை நடைமுறைகள் தொடர்ந்தால், 2050க்குள் பூமியின் 90 சதவீதம் நிலப்பரப்பு சீரழியும் நிலைக்குத் தள்ளப்படலாம். இது உணவுப் பாதுகாப்பு, நீரின் தரம் மற்றும் உயிரியல்
பன்முகத்தன்மை ஆகியவற்றுக்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்தியாவின் நிலைமையும் இதற்கு விதிவிலக்கல்ல. சமீபத்திய ஜூன் 2026 ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலம் சீரழிவுக்கு உள்ளாகியுள்ளது. மண்ணில் நைட்ரஜனின் அளவு 5 சதவீதத்துக்கும் குறைவாகவும்,
மண்ணின் கரிம கார்பன் (Soil Organic Carbon) அளவு 0.54 சதவீதத்துக்குக் கீழேயும் சரிந்துவிட்டது. இவை விளைச்சலை மட்டுமின்றி, மண்ணின், மனிதர்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கின்றன.

இவை தவிர, கன உலோக மாசுபாடு (Heavy Metal Contamination) சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, பயிர்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பெரும் உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகிறது.

விவசாயிகளின் கண்ணோட்டம்:

இப்படிப்பட்ட நிலையில், ஒரு விவசாயியின் முன்னே இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன. தன் அன்றாட வாழ்வை நடத்துவதற்காக ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் தொடர்ந்து பயன்படுத்துவது முதல் வாய்ப்பு.
இல்லையெனில், இயற்கை வேளாண்மைக்கு மாறுவது இன்னொரு வாய்ப்பு.

முதல் வாய்ப்பை தேர்வு செய்தால், மண் மேலும் மேலும் அழிவுக்கு உள்ளாகி, எதிர்காலத்தையே ஆபத்தில் ஆழ்த்திவிடும். இரண்டாவது வாய்ப்பை தேர்வு செய்தால், நீண்ட கால நோக்கில் மண்ணுக்கு நல்லது. ஆனால், இயற்கை விவசாயத்துக்கு மாறும்போது விளைச்சலில் ஏற்படும் உடனடி வீழ்ச்சியையும், அதனால் உருவாகும் பொருளாதார இழப்பையும் சந்திக்க நேரிடும். இது, விவசாயியின் வாழ்வாதாரத்தையே ஆட்டம் காண வைக்கிறது. ஆகவே, மேற்கண்ட இந்த இரண்டு வழிகளாலும் நிலையான ஒரு தீர்வை அளிக்க முடியாது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

மீளுருவாக்க விவசாயம்:

இந்த கடுமையான நெருக்கடிக்கு நம் முன்னே ஒரு தீர்வு உள்ளது. அதுதான் மீளுருவாக்க விவசாயம் (Regenerative Agriculture). இதனை ஊட்டச்சத்து விவசாயம் (Nutrition Farming) என்றும் சொல்லலாம். இது வெறும் கோட்பாடு அல்ல; முழுக்க முழுக்க விவசாய அறிவியல். எந்தப் பயிருக்கு, எந்தப் பருவத்தில், என்ன ஊட்டச்சத்து, எப்படிக் கிடைக்க வேண்டும் என்ற வரையறையைப் புரிந்துகொண்டு செய்யும் விவசாயம் இது. அதே நேரத்தில், பயிரின் விளைச்சலோ அல்லது மண்ணின்
வளமோ குறையக்கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு, அறிவியல் வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட விவசாய முறை ஆகும்.

இந்த சாகுபடி முறை காரணமாக, மண்ணின் ஆரோக்கியம் சீர்கேடு அடையாது. மாறாக இழந்துபோன மண்ணின் வளம் மீட்டெடுக்கப்பட்டு, கடந்த காலத்தை விட இன்னும் ஆரோக்கியமானதாக நம் மண் மாறும். மண்ணைக் காக்கும் அதே நேரத்தில், விளைச்சலை அதிகரிக்கும் வழிகளும் இதில் உள்ளன.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது எந்த நோயும் வராது என்பது நமக்குத் தெரியும். அதுபோலவே, நம் வயலில் உள்ள பயிர் நல்ல ஆரோக்கியத்துடன் வளரும்போது, பூச்சியோ, நோயோ அந்தப் பயிரை எளிதில் தாக்காது. இத்தகைய ஆரோக்கியம் மிகுந்த பயிர், மண்ணையும் வேகமாக வளமாக்கும். இதுவே மீளுருவாக்க விவசாயத்தின் அடிப்படை.

நெதர்லாந்தின் வெற்றி:

நெதர்லாந்து என்பது அமெரிக்காவை விட, இந்தியாவை விட மிகச் சிறிய ஒரு நாடு. ஆனாலும் உலகிலேயே அதிக விவசாய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்து முன்னணியில் இருக்கிறது. அறிவியல் சார்ந்த விவசாய முறையே
அந்நாட்டின் இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமாகும்.

இயற்கைக்கும், விவசாயிக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் நன்மை பயக்கும் இந்த மீளுருவாக்க விவசாய அணுகுமுறைகளைப் பற்றி இன்னும் நிறைய விசயங்களை ஆழமாக விவாதிக்க இருக்கிறோம். இது பற்றி நாம் தொடர்ந்து பேசுவோம்.
தொடர்புக்கு: 93420 49144

Share this article

Help others discover this content

Share on social media:

Article URL:

https://newviva.in/blog/hindu-tamil-thisai-article-1

More from thoughts-ideas